குறையை நிறையாக மாற்றிய விவசாயி | Tamil Inspirational Story
ஏழை விவசாயி
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டுப் பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்துச் செல்வான். இரண்டுப் பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.
பனையின் கேள்வி
குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றிப் பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்துக் கொண்டே இருக்கும்.
இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. குறையில்லாதப் பானையின் கேலியைப் பொறுக்க முடியாத பானை அதன் எஜமானைப் பார்த்துப் பின் வருமாறுக் கேட்டது.
குறையும் - கேவலமும்
"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப்பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவுக் கூர்ந்து சரி செய்யுங்களேன்"
அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகானப் பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா ? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால் தான் வழி நெடுக நான் பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன்.
அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்றுப் பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகானப் பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் என்னுடைய வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"
இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை முற்றிலும் நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது…
கதையின் நீதி : நம்மைப் பற்றி அடுத்தவன் ஆயிரம் பேசுவான் ஆனால் நமக்கு அவன் தினமும் சோறு போடுவானா இல்ல காசு பணம் கொடுத்து எதுவும் உதவி செய்வானா நம்முடைய வாழ்க்கை நம் கையில் மட்டும் தான் உள்ளது அடுத்தவர் பேச்சைப் பற்றி நாம் கவலைப்பட்டால், நாம் எந்த வேலையையும் செய்யவே முடியாது மற்றும் வாழவே முடியாது இது தான் உண்மை.

0 Comments